search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக தோஷம்"

    • நாகபஞ்சமி ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படுகிறது.
    • ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும்.

    வட இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவிலும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக இருக்கிறது, 'நாக பஞ்சமி' விரதம். இது ஒவ்வொரு ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படும் ஒப்பற்ற நிகழ்வாகும். இந்த நிகழ்வு வந்ததற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.

    ஒரு சமயம் பரீட்சித் மகாராஜா வனத்திற்கு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது தன்னுடைய படைகளை விட்டுப் பிரிந்து நீண்ட தூரம் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு தாகம் அதிகம் எடுத்ததால், தண்ணீரைத் தேடினார்.

    ஓரிடத்தில் மகாசந்தர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறியாத பரீட்சித் மன்னன், அவரிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டான். ஆனால் அந்த முனிவர் அசைவற்ற நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.

    இதனால் கோபம் கொண்ட மன்னன், அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை அவரது கழுத்தில் போட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

    மகாசந்த முனிவரின் மகன், சிறந்த சிவ யோகி ஆவார். அவர் தன் தந்தைக்கு நடந்த அநீதியை யோக சித்தியின் மூலம் அறிந்தார். பின்னர், "என் தந்தை யோகத்தில் இருக்கும் பொழுது, அவரது கழுத்தில் பாம்பை போட்டு அவமதித்தவன் யாராக இருந்தாலும், 'தட்சகன்' என்ற நாகம் கடித்து ஏழு நாட்களுக்குள் இறந்து விடுவான்" என்று சாபமிட்டார்.

    பரீட்சித் மகாராஜா, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். சர்ப்பத்தின் கடியில் இருந்து தப்பிக்க நாகசம் என்ற பட்டினத்தில் ஒரு கோட்டையை கட்டி, அதில் பாதுகாப்பாக இருந்தார். மணி, மந்திர, ஔஷதங்களில் சிறந்தவர்கள் அனைவரும் தன்னை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

    7-வது நாள் பரீட்சித் மகாராஜாவை கடிப்பதற்காக, நாகங்களின் தலைவனான தட்சகன், வயதான வேதியர் உருவம் எடுத்து வந்து கொண்டிருந்தான். இதற்கிடையில் மகாராஜாவை நாகத்தின் விஷத்தில் இருந்து காப்பாற்றுபவர்களுக்கு லட்சம் பொன் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதைக் கேட்ட கஸ்யபன் என்ற மந்திரவாதியும் அங்கே வந்து கொண்டிருந்தான். வழியில் தட்சகனும், கஸ்யபனும் சந்தித்துக் கொண்டனர்.

    மந்திரவாதியை சந்தித்த தட்சகன், தான் யார் என்பதை அவனிடம் கூறி தன்னுடைய வலிமையைக் காட்டினான். எதிரே இருந்த பசுமையான ஆலமரத்தை தட்சகன் கடிக்க, அடுத்த நொடியே அந்த ஆலமரம் எரிந்து சாம்பலானது.

    அதைப் பார்த்த மந்திரவாதி, மந்திர ஒலியால் தீர்த்தமாக மாறியிருந்த நீரை, எரிந்துபோன ஆலயமரத்தின் மீது தெளித்தான். மறுநொடியே அந்த ஆலயம் பழையபடியே பசுமையாக உருமாறியது.

    மந்திரவாதியின் வலிமையை உணர்ந்த தட்சகன், "கர்மவினையால் பரீட்சித் மகாராஜா இறக்க வேண்டும். அவன் தருவதாக சொன்ன லட்சம் பொன்னை நான் உனக்கு தருகிறேன், பெற்றுக்கொள்" என்று கூறி, லட்சம் பொன்னை கொடுத்து, மந்திரவாதியை திருப்பி அனுப்பினான்.

    பின்னர் தட்சகன், மகாராஜா தங்கியிருந்த கோட்டையை அடைந்து, அங்கிருந்த காவலர்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டான். ஆனால் அவர்கள், 'யாரும் அரசனை சந்திக்க முடியாது' என்று கூறி மறுத்துவிட்டனர்.

    உடனே தட்சகன், காமரூப சக்தி உள்ள ஒரு நாகத்தை, ஒரு வேதியராக மாற்றினான். பின்னர் தான் ஒரு புழுவாக மாறி பழம் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டான். அந்த வேதியர், காவலர்களிடம், "நாங்கள் மன்னனுக்காக தரும் மந்திரித்த பிரசாதத்தை அவரிடம் கொடுங்கள்" என்று கூறி பழக்கூடையை வழங்கினார்.

    அதை எடுத்துச் சென்று மகாராஜாவிடம், காவலர்கள் கொடுத்தனர். அதில் இருந்த கனியை எடுத்து மன்னன் சாப்பிட்டான். அப்போது அதனுள் புழுவாக இருந்த தட்சகன், பரீட்சித் மகாராஜாவை கடித்ததும், அவர் இறந்தார்.

    பரீட்சித் மகாராஜா இறந்ததும், அவருடைய மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அவர் காசி தேசத்து அரசனான சுவர்ண வர்ணாகரன் மகள் வபுஷ்டை என்பவளை திருமணம் செய்து கொண்டான்.

    ஒரு முறை ஜனமேஜயன் அரசவைக்கு, உத்துங்கர் என்ற முனிவர் வந்தார். அவர், "அரசே.. உனக்கு எதிரிகளே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாயா?. உன் தகப்பனாரைக் கொன்ற தட்சகனை பற்றி உனக்குத் தெரியாதா?" எனக்கூறினார். பின்னர், "நீ ஒரு மிகப்பெரிய சர்ப்ப யாகம் செய்து தட்சகனை அழிக்க வேண்டும்" என்றார்.

    அதைக் கேட்ட ஜனமேஜயன், "என்னால் சர்ப்பங்களின் தலைவனான தட்சகனை அழிக்க முடியுமா?" என கேட்க, அந்த முனிவரோ, "மன்னா.. உனக்கு தெரியாது. ஏற்கனவே நாகங்களுக்கு சாபம் உண்டு. எனவே நீ தைரியமாக அந்த யாகத்தை செய்" என்றார். அந்த சாபத்தைப் பற்றியும் மன்னனிடம் கூறினார்.

    காசியப முனிவரின் மனைவிகளில் இருவர், கத்ரு மற்றும் வினதை. ஒரு சமயம் இவர்கள் இருவரும் வானில் உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையைக் கண்டனர். அந்த குதிரை கருப்பு நிறம் என்றாள், கத்ரு. வினதையோ அது வெள்ளை நிறம் என்று கூறினாள். இது அவர்களுக்குள் போட்டியாக மாறியது.

    அப்போது கத்ரு, தன் பிள்ளைகளை அழைத்து, "ஓ சர்ப்பங்களே.. நீங்கள் விரைந்து சென்று, உச்சிஸ்ரவரஸ் குதிரையில் போய் ஒட்டிக் கொள்ளுங்கள். அப்போது அது கருப்பாக தெரியும்" என்றாள். அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் பல நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட கத்ரு, தனக்கு உதவி செய்ய மறுத்த பிள்ளைகளை நோக்கி, "நீங்கள் அனைவரும் பின்னாளில் ஒரு மன்னன் செய்யும் யாக குண்டத்தில் விழுந்து அழிவீர்கள்" என்று சாபமிட்டாள்.

    உத்துங்கர் முனிவரிடம் இருந்து நாகங்களின் சாபத்தை அறிந்த ஜனமேஜயன், யாகம் செய்ய முன்வந்தான். யாகம் தொடங்கிவிட்டது. அப்போது தட்சகன் ஓடிச் சென்று இந்திரனை சரணடைந்து, அவனுடைய ஆசனத்தைச் சுற்றிக் கொண்டான்.

    ஜனமேஜயன் யாகம் செய்யச் செய்ய, அந்த குண்டத்தில் வானில் இருந்து பல பாம்புகள் வந்து விழுந்தன. யாகத்தின் சக்தி, தட்சகனையும் குண்டத்தை நோக்கி இழுத்தது. இதனால் இந்திரனின் ஆசனமும், இந்திரனும் தட்சகனுடன் சேர்ந்து பூமிக்கு வந்தனர்.

    அப்பொழுது இந்திரன், ஜரக்காரு முனிவரின் புதல்வரான ஆஸ்திகர் என்ற முனிவரை நினைத்து தியானம் செய்தார். உடனே ஆஸ்திக முனிவர் யாகசாலைக்கு வந்து, "தர்மாத்மாவான நீ இதை செய்ய வேண்டாம். இந்த யாகத்தை நிறுத்து" என்று ஜனமேஜயனை கேட்டுக்கொண்டார்.

    அவரது வேண்டுகோளை ஏற்று, உத்துங்க முனிவரும், ஜனமேஜய மகாராஜாவும் யாகத்தை நிறுத்தினர். இந்த நிகழ்வு நடந்தது நாக பஞ்சமி அன்றுதான். எனவே ஆண்டுதோறும் அந்த நாளில் நாக பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    நேபாளத்தில் நாக பஞ்சமி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாகங்களை பூஜிப்பதால், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும். அதோடு விஷத்தால் ஏற்படும் அபாயங்கள் நீங்கும்.

    • கறுப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.
    • 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

    ராகு, கேது, தலமான காளகஸ்திக்கு சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

    ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து குழந்தைகள் பிறப்பார்கள்.

    ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி தேவிபட்டினம் போகும் பஸ்சில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும். கடலில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும். இதனால் குழந்தை பாக்யம் உண்டாகும்.

    ராமநாதபுரத்தில் இருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.

    நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும்.

    கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    பொருள் படைத்தவர் தங்கத்தால் குழந்தை உருவம் செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி, துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.

    தங்கத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.

    தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி, துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

    கருங்கல்லில் நாக பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

    இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.

    கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

    குளம் அல்லது நதிக்கரையில் அரசு வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். நல்ல குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

    வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்து அளித்து புது வேட்டி துண்டு. தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.

    வீட்டில் ராகு படம் வைத்து தினமும் பூஜை செய்யலாம். தினமும் இராமாயணம் படிக்கலாம்.

    மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.

    சிவாலயம் சென்று நவக்கிரகப் பிரதட்சணம் செய்யும் போது முதலில் வசமாக ஒன்பது முறை வலம் வந்து பிறகு ராகு கேதுவுக்கு பிரீதியாக இரண்டு முறை இடமாக வலம் வரவேண்டும். இவ்விதம் தினமும் செய்து வந்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறந்து நீண்ட ஆயுகளுடன் இருப்பார்கள்.

    நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்ய செல்லும் போது ஓரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.

    ராகுவை பிரீதி செய்ய கறுப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.

    • இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
    • மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.

    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

    ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.

    காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.

    நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.

    நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • சுமங்கலிகள் அருகேயுள்ள அம்மன் கோவில்களில் உள்ள புற்றுகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பால் தெளித்துக் குடும்ப சேமங்களைப் பெறலாம்.
    • ஜென்ம நாக தோஷம் உடையவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட, சக நண்பர்களால் இடைஞ்சல் அடைவர்.

    ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்னும் சர்ப்ப பூஜை செய்வார்கள். இது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சிவபெருமான் நாகத்தை பூஷணமாகக் கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்தபடி நாகம் உள்ளது.

    சர்ப்ப வழிபாடு வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. ஜாதக அமைப்பில் நம்மை ஆட்டிப் படைப்பது நவகிரகங்களாகும். இதில் ராகுவும் கேதுவும் நாக வடிவுடையவனாகும்.

    தெரிந்தோ தெரியாமலோ நாம் முற்பிறவியிலே நாகத்தை அடித்துக் கொன்றிருக்கலாம் அல்லது துன்புறுத்தியிருக்கலாம். அதனால் தற்போது பல வகையான சாபத்துக்குள்ளாகித் துன்பத்தை அனுபவித்த வருகிறோம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயில் வீழ்ந்தும், பிள்ளைகளால் விரட்டப்பட்டும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாடுதலும் போன்ற குறைகள் நாகதோஷத்தினால் ஏற்படுகின்றன. இதிலிருந்து நிவாரணம் பெற அந்த நாக தேவதைகளை மனமுருகி வழிபட்டால், அவற்றின் கருணையைப் பெற்று தோஷ நிவாரணம் அடைந்து, எஞ்சிய நாட்களை நல்ல முறையில் வளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.

    முதலில் வீட்டில் நாக தோஷம் நீங்கிச் சுகவாழ்வு பெற என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். நம் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட ராகு-கேது கிரகங்களுக்கான கோலங்களை முறையே செவ்வாய், சனிக்கிழமைகளில் பூஜையறையில் பச்சரிசி மாவினால் போட்டு, குத்து விளக்கேற்றி வைத்து, ராகு மற்றும் கேது நாமாவளியால் அர்ச்சித்து (மலரிட்டு), காயத்ரிகளைப் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் விலகி விருப்பங்கள் பூர்த்தியாகும்.

    ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண்கள், பிரதி ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. இதுபோல் தொடர்ந்து 11 வாரம் செய்து 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்யவும். மணம் கூடிவரும். திருமணமானவர்கள் இல்வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற பிரதி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 10.30 - 12.00) தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றி நாகதேவதையை சந்தோஷப்படுத்தலாம்.

    பலவிதமான இன்னல்களால் சிக்கித் தவிப்பது கேது தோஷமாகும். இத்தகையோர் பிரதி செவ்வாய்க்கிழமை பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து விழுந்து வணங்கி வலம் வந்தால் நலம் உண்டாகும்.

    சுமங்கலிகள் அருகேயுள்ள அம்மன் கோவில்களில் உள்ள புற்றுகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பால் தெளித்துக் குடும்ப சேமங்களைப் பெறலாம்.

    அரச மரத்திற்கு அடியிலோ அல்லது வேப்ப மரத்திற்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்களுக்கு எண்ணெய் தடவி, பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு, மலர் தூவி அலங்காரம் செய்து மஞ்சள் வஸ்திரத்தை (புதிதாக) உடுத்தி, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கலுடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனதார பூஜித்து வந்தால் சகல நாக தோஷமும் தீரும்.

    தீய பழக்க வழக்கமுள்ள புத்திரர்களைத் திருத்தவும், அவர்கள் நல்ல படிப்பையும் அறிவையும் பெறவும், அம்மனுக்குப் பால் காவடி எடுப்பது நலம் தரும்.

    நாக தோஷத்தினால் ஏற்படும் அவமானங்கள், பெண்களால் உண்டாகக் கூடிய கசப்பான சம்பவங்களிலிருந்து நிவாரணம் பெற்ற, பிரதோஷம் தோறும் மவுன விரதமிருந்து உமாமகேஸ்வரியையும் நாகவல்லி அம்மனையும் பிரார்த்தனை செய்து வரலாம்.

    சிறிய விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களும், மனைவியின் தீராத நோய் நீங்கவும், கண் பார்வை சம்பந்தமான நோயால் அவதிப்படுபவரும், கொடுத்த பணம் இடையூறின்றித் திரும்பக் கிடைக்கவும், பல தாரம் ஏற்படாமல் இருக்கவும், ஏமாற்றங்களைத் தவிர்க்கவும், குழந்தைகளிடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஏற்படவும் ஆடி வெள்ளி தோறும் புற்றுக்கு பால் தெளிப்பது அவசியம். ராகு-கேது ஸ்தலங்களான ஸ்ரீ காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வர வேண்டும்.

    ஜென்ம நாக தோஷம் உடையவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட, சக நண்பர்களால் இடைஞ்சல் அடைவர். சொந்த தொழிலில் நஷ்டம் அடைவர். இத்தகையோர் பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து தானம் அளித்தால் நாக தோஷம் நீங்கி நலமடைவார்கள்.

    காலமும் கணவன்-மனைவிக்குள் சண்டை, தொடர்ந்து வரும் நிலை உள்ளவர்கள் வெள்ளி அல்லது செம்பினால் செய்த ஒன்றைத் தலை நாக தேவதை உருவத்தை, வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து மலர்களால் அல்லது குங்குமத்தால் 41 நாட்கள் அர்ச்சனை செய்து அதை திருநாகேஸ்வரம் கோவில் உண்டியலில் சேர்ப்பித்தால் பலன் கிடைக்கும்.

    • பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
    • பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

    1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.

    2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

    3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

    4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

    5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

    6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

    7. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

    8. கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

    • வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.
    • பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம்.

    நாக தோஷம் என்பது நவக்கிரக கோள்களில் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு/கேது ஆகியவைகளால் ஏற்படுவதாகும். ராகு கேது ஆகிய இவ்விருவரும் அசுப கிரகங்கள். இவர்கள் சூரியன், செவ்வாய், சனி ஆகிய இயற்கையான அசுப கிரகங்களைக் காட்டிலும் அதிக தீமை பயப்பவர்கள்.

    இவர்களுக்கு பன்னிரண்டு ராசிகளில், தமக்கென உரிய ராசி என்று ஏதும் இல்லையென்றாலும், தாம் சஞ்சரிக்கும் ராசியை தமதாக்கி, அந்தப் பாவத்திற்குரிய நற்பலன்களை நலிவடையச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் அது மட்டுமல்லாமல் அந்த பாவத்திற்குரிய பொறுப்பையும் ஏற்று செயல்படும் வலிமை பெற்றவர்கள்.

    நவக்கிரகத்துத் தலையாய நாயகர்களாகிய சூரியன் மற்றும் சந்திரன் இவர்களுக்கு எதிரிகளாவதோடு, ஒளிதரும் அவர்களைத் தனது நிழலால் மறைத்து கிரகண தோஷத்தை உண்டாக்கி உலகை இருளடையச் செய்யும் வல்லமைப் பெற்றவர்கள். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் வலமாகச் சுற்றாமல் இடமாக சுற்றுவதோடு, எப்போதும் 7க்கு 7ஆக அமைந்து இயங்குபவர்கள்.

    அதனால் தான் பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். இதைப் போல வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.

    பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம். ஒருவர் பிறக்கும்போது கணிக்கப்படும் ராசி கட்டத்தில் ராகு-கேது ஆகியவர்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதையே கடுமையான கால சர்ப்ப யோக தோஷங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

    ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் கீழ்கண்டவாறு ராகு - கேதுக்கள் இருப்பதை கால சர்ப்ப யோக தோஷங்கள் எனப்படும்.

    ராகு, கேது இருக்கும் இடம்

    ராகு 1 7 2 8 3 9 4 10 5 11 6 12

    கேது 7 1 8 2 9 3 10 4 11 5 12 6

    மேற்குறிப்பிட்டபடி ஜாதகம் அமையப் பெற்றவர்கள் வறுமை, துன்பம், வியாதி, தொழில் இழப்பு, பகை, அரக்கசுபாவம், திருமணத்தடை, புத்திர தோஷம் முதலான துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. எங்கு சென்றால் துன்பங்கள் நீங்கி முக்தி பெற முடியும் என்று வழித் தெரியாமல் பலர் தவிக்கின்றனர். ஜாதகம் கணிக்காவிட்டாலும் மேற்படித் துன்பங்களை பலர் அனுபவித்து வருகின்றனர். இதற்கு ஒரே வழி இறைவனை முறையாக வழிப்பட்டால்தான், துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும்.

    தினமும் காலையில் சூரியபகவானை வணங்கி, திருஞானசம்மந்தப் பெருமான் அருளிச் செய்த கோளறு பதிகம் 11 பாடல்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் முதலானவற்றை தினமும் பாராயணம் செய்து, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி முதலான புண்ணிய காலங்களில் விரதம் இருந்து ஒன்பது வாரங்கள் பரமேசுவரன் மற்றும் நவக்கிரகங்களை வழிப்படுகிறவர்களுக்கு இறையருளால் பகைவராலோ, கடனாலோ, நோய்களாலோ ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.

    • காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப்பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
    • மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.

    நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள். இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி, சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.

    இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுக்ல பஷ சஷ்டியன்று அதிகாலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை

    அறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம் திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள் வைத்து நிவேதினம் செய்து தூபதீபம் காட்டிப் பிராத்தனை செய்ய வேண்டும்.

    பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம். காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப்பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

    மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிடலாம். நாகராஜ விரதமிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

    அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக்காணலாம் என சர்ப்ப தோஷபரிகார நூல் கூறுகிறது.

    • நம்பூதிரி, தன் கைகளால் சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.
    • தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.

    கேரளாவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை. நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை, சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.

    அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார். அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.

    தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார். அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.

    இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும் இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார். மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார். மன்னரின் உடலில் இருந்த சருமவியாதி நீங்கியது.

    இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன் பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன் கேரள தேசத்துக்கு திரும்ப அனுப்பி வைத்தார்.

    • பிக்னிக் செல்வது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும்.
    • தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

    பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். பிக்னிக் செல்வது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

    * காளஹஸ்தி

    திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. சென்னை-திருப்பதி சாலையில் உள்ளது. ரேணிகுண்டா ரெயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் காளஹஸ்தி செல்லலாம்.

    * திருநாகேஸ்வரம்

    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நாகருக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    * திருமணஞ்சேரி

    இது கும்பகோணத்திலிருந்து குத்தாலம் சென்று, அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.

    * திருப்பாம்புரம்

    கும்பகோணத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் உள்ளது.

    * வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

    திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள புற்றுமண் சர்வரோக நிவாரணியாகும்.

    * கீழ்பெரும்பள்ளம்

    கேது சேஷத்திரம் - இங்கும் பரிகாரம் செய்து வைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.

    * மன்னார்சாலா - கேரளா

    எர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது.

    * பாம்பு மெய்காட்டு அம்பலம்

    திருச்சூரிலிருந்து மாலா என்னும் ஊரில் உள்ளது.

    • காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள்.
    • 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.ஆனாலும் திருமணம் போன்ற விஷயங்களுக்கு இந்த கால சர்ப்ப தோஷம் எந்த விதத்திலும் பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்பதை முழுமையாக நம்பலாம்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

    ராகுவின் ஆலயங்களாக திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று இறைவனை வழிபட ராகுவின் தோஷம் விலகி நன்மைகள் நடக்கும்.

    சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயம் கேது பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சனிக்கிழமையில் சென்று இறைவனை தரிசித்தால் கேதுவின் தோஷம் நீங்கி நன்மைகள் நடக்கும்.

    ஸ்ரீகாளகஸ்தி, ராகு-கேது இருவருக்குமான ஸ்தலமாக இருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது ராகு கேதுவின் தோஷம் வீரியத்தைக் குறைக்கும். மேலும் கேதுவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ள காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்திற்கு சென்று வருவது நல்ல பலன்களைத் தரும்.

    அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ துர்கை வழிபாடும், புற்று உள்ள அம்மன் ஆலயங்கள், கருமாரியம்மன் ஆலயம், நாகாத்தம்மன் ஆலயம் முதலான கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது ராகு கேதுவின் வீரியத்தைக் குறைத்து நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.

    • திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது.
    • சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது. கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியும் வரைக்கும் தினசரியும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கி நல்ல புத்திரர் பிறப்பார்கள்.

    தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம். கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும். கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும். சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

    சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும். குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

    • கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது.
    • கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.

    திருமணத் தடை: கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது. ராகு/கேதுக்கள் நின்ற நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் ராகு- கேதுக்கள் இருந்தால் பாதகத்தை தரும். தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் உரிய வயதில் நடக்கும்.

    சிலருக்கு காதல் திருமணத்தை நடத்தி இல்வாழ்க்கையில் சங்கடத்தை மிகைப்படுத்தும் அல்லது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். அதனால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடத்துவது சிறப்பு.

    பரிகாரம்: ஜனன கால ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைகளுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை செய்து வர வேண்டும். சுவாதி, சதயம், திருவாதிரை, அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரதோ‌ஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் தோ‌ஷத்தின் வீரியம் குறைந்திடும்.

    புத்திரபாக்கியம் : குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம், அடிக்கடி கருக்கலைதல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பது அல்லது ஆண் வாரிசுகள் மட்டும் இருப்பது போன்ற குறைபாடு இருக்கும். சிலருக்கு பெற்ற பிள்ளைகளால் வாழ்நாள் முழுவதும் மனவேதனை இருந்து கொண்டே இருக்கும்.

    பரிகாரம் : கிருத்திகை, விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று திருச்செந்தூர் முருகனை நினைத்து 27 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். திருவாதிரை, மகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.

    நோய் : தோ‌ஷத்தின் வீரியம் அதிகமாக இருந்தால் ராகு-கேதுவின் தசா, புத்தி அந்தர காலங்களில் அல்லது 6,8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இனம் புரியாத நோய் அல்லது தீராத நோய் அல்லது ஆயுள் பயம் அதிகமாக இருக்கும்.

    பரிகாரம் : மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும்.

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்

    உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

    அதிர்ஷ்டம் : நித்திய கண்டம் பூரண ஆயுள் என சிலருக்கு அதிர்ஷ்டக் குறைபாடு மிகுதியாக இருக்கும், பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள், நிரந்தர தொழில் மற்றும் வேலை இல்லாத நிலை, வறுமை, குடும்பத்தில் மிகுதியான கூச்சல் குழப்பம் , உழைப்பிற்கு தகுந்த ஊதியமின்மை, தொடர் விரயம், வீட்டில் தங்கம் தங்காத கஷ்டம் நிலவும்.

    பரிகாரம் : திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரரை வழிபட வேண்டும்.

    சாதாரண பாதிப்பை தரும் எந்த தோ‌ஷத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.

    மேலேயே கூறியது போன்ற குறைபாடு இருப்பவர்கள் நம்பிக்கையுடன் குலதெய்வ வழிபாடு, கருட வழிபாடு செய்து கருட சுலோகங்களை படித்து வர பாதிப்பின் சுவடே தெரியாது.

    ×